சிஎஸ்ஐ டயோசீசன் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Update: 2024-02-19 15:55 GMT
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் தா.வசந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் 500க்கும் மேற்ப்பட்ட சபைகளும், 200 க்கும் மேற்ப்பட்ட கல்வி நிலையங்களும், பல கோடி மதிப்புள்ள வணிக வளாகங்கள், கட்டிடங்கள், நிலங்கள் என பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. அசிரியர் நியமனம், குத்தகை என பல வகையான வரவினங்களை கொண்டு தனி அரசாங்கமே நடைபெற்று வருகின்றது. திருமண்டல நிர்வாகத்தின் ஏகபோக அதிகாரத்தின் நிர்வாகியை தேர்ந்தேடுப்பதில் கோஷ்டி மோதல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. கிறித்தவர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் அவர்கள் நடத்தக்கூடிய கல்விகூடங்கள், காப்பகங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் பாதிரியாரினாலோ அல்லது அதன் நிர்வாகிகளினாலோ கோஷ்டி மோதல்கள், குற்ற செயல்கள் என ஆங்காங்கே நடைபெற்று வருவது வழக்கமாகியுள்ளது. இந்துக்களின் திருக்கோவில்கள் மற்றும் திருமடங்கள், அதன் சொத்துக்களையும் நிர்வகிப்பதற்கு தனி அமைச்சகம் உள்ளது. இஸ்லாமியர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறித்தவர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் அவைகளின் சொத்துக்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் எந்தவித வழிவகையும் செய்யாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் அதன் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதில் கோஷ்டி மோதல்கள், பாதிரியார்கள் குறித்த பாலியல் குற்றசாட்டுகள், கல்விகூடங்களில் ஏற்படும் மாணவ, மாணவிகளுக்கு எதிரான குறைகள் மற்றும் குற்றங்கள் என தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஆகவே கிறித்தவர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் அவைகளின் சொத்துக்களை கண்காணிக்க தனி வாரியம் அமைத்திட வேண்டுகிறோம். மேலும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.