ஆபத்தான கான்கிரீட் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே உள்ள ஆபத்தான கான்கிரீட் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கான்கிரீட் நடைபாலம் அமைத்துள்ளது.20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பாலம் வழியாக மேலிருப்பு,சியாத்தமங்கை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் சென்று வருகின்றனர்.பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,அரசு ஊழியர்கள்,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்,மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இந்தப் பாலம் வழியாக பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும்.மேலும் குறுகிய பாலமாக இருப்பதால் அவசர தேவைகளுக்கு இந்த வழியே ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.இப்பாலத்தின் வடக்கு கரையில் உள்ள கிராமங்களில் தீவிபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது.
சீரமைக்கப்படுமா தற்போது இந்த கான்கிரீட் நடை பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் இரும்பு கைப்பிடிகள் சேதமடைந்துள்ளன.இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் செல்கின்றனர்.மேலும் இந்த இடத்தில் மின் விளக்குகள் இல்லாத இரவு நேரங்களில் இப்பாலம் வழியாக செல்பவர்கள் தடுப்பு சுவர் இல்லாததால் நிலை தடுமாறி ஆற்றுக்குள் விடும் ஆபத்தான நிலை உள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் சீரமைத்து தர வில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நடை பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.