நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை படகுகள் மூலம் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமான நாகூர் தர்ஹா வரும் பக்தர்கள் மொட்டையடித்து தர்ஹா குளத்தில் புனித நீராடி நாகூர் ஆண்டவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நாகூர் தர்ஹா குளத்தில் இன்று காலை திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குளத்தின் நிறம் பச்சையாக மாறி நான்கு புறத்திலும் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதந்தன. இதன் காரணமாக தர்ஹா குளம் மேற்கு, வடக்கு, தெற்கு, நூல்கடை தெரு, கலீபா சாஹிப் தெரு உள்ளிட்ட தெருக்கள் மட்டுமில்லாமல் 1 கிலோ மீட்டர் தூரம்வரை துருநாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இதனை அறிந்த நாகூர் தர்ஹா தலைமை அறங்காவலர் ஹுசைன்சாஹிப் தலைமையில் தர்ஹா நிர்வாகிகள் குளத்தில் உடனடியாக ஆய்வு செய்து 10 மீனவர்களை கொண்டு சிறிய படகுகளை வைத்து மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்ததாகவும், விரைவில் குளம் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும் தர்ஹா அறங்காவலர் தெரிவித்துள்ளார்.