தீபத்திருவிழா : சிம்ம வாகனத்தில் பிடாரியம்மன் வீதியுலா

Update: 2023-11-16 03:14 GMT

 சிம்ம வாகனத்தில் பிடாரியம்மன் வீதியுலா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நாளை (17ம் தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை அதிகாலை 4.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள், அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக, நகர காவல் எல்லை தெய்வ வழிபாடு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி இந்த வழிபாடு நடத்தப்படுவது மரபாகும். அதன்படி, முதல் நாளான நேற்று முன்தினம் துர்க்கை அம்மன் உற்சவம் நடந்தது. சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று பிடாரி அம்மன் உற்சவம் நடந்தது. அப்போது, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிடாரி அம்மன் சன்னதியில், பிரமாண்டமான உணவு படையல் நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று இரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்தார். அப்போது, மாடவீதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். மேலும், தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, இன்று விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது. அப்போது, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற உள்ளது.
Tags:    

Similar News