பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பிடம் அமைக்க கோரிக்கை
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ,பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 20,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், தினசரி வாலாஜாபாத் பேருந்து நிலையம் வருகின்றனர். அங்கிருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்து பிடித்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டண கழிப்பறை உள்ளது.
இந்த கழிப்பறையில் போதுமான அறை மற்றும் சிறுநீர் கழிப்பதற்கான தனி வசதி இல்லை. மேலும், கழிப்பறைகளின் கதவுகள் உடைந்தும், தாழ்ப்பாள் இல்லாமலும் காணப்படுகின்றன. சுத்தம் செய்வதற்கு தேவையான தண்ணீர் தொட்டி மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பற்பசை, கை கழுவ சோப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் போதுமான இட வசதியோடு நவீன கழிப்பறை கட்டடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்."