விபத்தை ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை
பள்ளிபாளையம் பிள்ளையார் காட்டூர் பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
By : King 24x7 Angel
Update: 2024-02-01 12:02 GMT
பள்ளிபாளையம் சங்கிகிரியை இணைக்கும் பகுதியில், பிள்ளையார் காட்டூர் என்ற பகுதி அமைந்துள்ளது. சேலம் ,சங்ககிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகளவு அதிவேக வாகனங்களும், கனரக வாகனங்களும், செல்லும் சாலையாக இந்த சாலை உள்ளது. மறுபுறம் ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் பிரதான சாலையாகவும் இது விளங்கி வருகிறது. 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகம் மிகுந்த பகுதியாக காணப்படும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மாதத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இது குறித்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் பொழுது, மிகவும் தாழ்வான சாலையாகவும், குறுகலான சாலையாகவும் இது இருப்பதால் ,வேகமாக வரும் வாகனங்கள் எதிர் திசையில் இருந்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் திரும்பும் பொழுது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டு விடுகிறது. சாலையின் ஒருபுறம் வெப்படை புற காவல் நிலைய எல்லையும், மற்றொருபுறம் பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லையும் இருப்பதால், இரு காவல்நிலைய போலீசாருக்கும் இந்த விபத்து குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் விபத்தை தடுக்கும் வகையில் பிள்ளையார் காட்டூர் பகுதி பிரதான சாலையில் வேகத்தடைகள் இருவரும் அமைக்க வேண்டும் . மேலும் வேகத்தடுப்பு இரும்பு டிவைடர்களை அமைத்து மீண்டும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்..