கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ஆவடி பெருநகர கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவடி பெருநகர கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஆவடி தொகுதி 21-வது மாநாடு மாவட்டத் தலைவர் மு.ராபர்ட்ராஜ் தலைமையில் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. சங்கக் கொடியை பி.சதீஷ்குமார் ஏற்றினார். துணைத் தலைவர் ஆர்.சுப்புராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மா.பூபாலன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் இ.கெங்காதுரை வேலை அறிக்கையையும், பொருளாளர் சி.கோவிந்தசாமி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன், மாமன்ற உறுப்பினர் அ.ஜான் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் பி.லூர்துசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர் ஜெ.கனகராஜ் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் கர்நாடக மாநிலம் போல் ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி விஷ கள்ளச்சாராய இறப்புக்கு காராணமான அனைவர் மீதும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், தேச விரோத, மக்கள் விரோத தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், நகர்ப்புற மக்களின் வாழ்விடங்களை அகற்றக் கூடாது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளி மனைவியின் மகப்பேறு நிதி 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இயற்கையாக மரணம் அடைந்தால் 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் சங்க நிர்வாகிகள் தலைவராக இ.கெங்காதுரை செயலாளராக ராபர்ட்ராஜ், பொருளாளராக சி.கோவிந்தசாமி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.