கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராமபகுதி, சமுதாய செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாதத்தில்செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நிர்மலா, மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
அரசின் செயல் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், கிராமப்புறங்களில் இருக்கும் கர்பிணிகள், குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களுக்கான சுகாதார உதவிகளை செய்வதில் கிராம, பகுதி, சமுதாய செவிலியர்களின் பங்கு முக்கியமானது. தற்போது சுகாதாரத்துறை கொண்டு வந்திருக்கும் பிக்மி 3.0 என்ற செயலி ஏற்புடையதாக இல்லை. செவிலியர்கள் நேரடியாக களத்திற்கு சென்று கணக்கெடுக்காவிட்டால் எவ்வாறு பிக்மி 3.0வில் பதிவிட முடியும் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு வழங்கும் டேப்லெட், லேப்டாப் போன்றவற்றில் இணைக்கப்பட்டிருக்கும் இணையதளங்கள் நகர் பகுதிகளிலேயே முறையாக செயல்படுவதில்லை. நாள் முழுவதும் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அப்படியிருக்கும் போது செல்போன்களில் சிக்னலே கிடைக்காத கிராமங்களில் அதை வைத்துக் கொண்டு எப்படி வேலை பார்க்க முடியும். எனவே “பிக்மி 3.0” செயலியில் பதிவிட வேண்டும் என்று நிர்பந்திப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். ஒருங்கிணைப்பு கூட்டுக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் நிர்மலா கூறியதாவது: தமிழகம் முவதும் உள்ள கிராம, பகுதி, சமுதாய செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசிடம் கோரிக்கை மனு அளித்தும் அரசு ஏற்காததால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள பொது சுகாதாரத்துறையில் கிராமப்புற சுகாதார மையங்களில் காலியாக உள்ள 3 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக ஆரம்பிக்க உள்ள துணை சுகாதார மையங்களில் தற்போது ஒப்பந்த பணியாளர்களான எம்எல்எச்பி என்ற இடைநிலை பணியாளர்கள் நியமணத்தை கைவிட்டு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். இணையதளம் என்ற பெயரில் 3.0 என்பது ஒட்டுமொத்த சுகாதார பணியையும் சீர்குலைக்கிறது. அதனை எளிமைப்படுத்த வேண்டும்.
அதுவரை 3.0 ஆய்வு செய்வதை கைவிட்டு, கூடுதல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும். அரசு கொண்டுவரும் ஆன்லைன் பணிகளில் செவிலியர்கள் ஈடுபட்டால் களப்பணி பாதிக்கப்படும். பெண் ஊழியர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, கன்னியக்குறைவாக பேசுவதை அதிகாரிகள் கைவிட வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் இறந்தால் அவர்கள் மீண்டும் கள்ளசாராயம் குடித்து இறந்தவர்களாக கருதப்படுவர். அப்படி இறப்பவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக செய்திகள் வெளியாகின்றன. செவிலியர்கள் பணிக்கு செல்லும் போது விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். அவர்கள் எங்கே, எப்போது குடிக்கின்றனர் என்பதை கண்காணிப்பது செவிலியர்கள், டாக்டர்களின் வேலையல்ல.
அதற்கு காவல்துறையும், வருவாய்துறையும் உள்ளன. அவர்கள் வேலையை எங்கள் மீது திணிப்பதும், எங்களுக்கு தண்டனை வழங்குவதும் சரியல்ல. அமைச்சர் கூறியதாக வரும் செய்தி உண்மையென்றால் அதை கூட்டமைப்பு சார்பில் வண்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.