பராமரிப்பின்றி சீரழியும் பூங்கா: மதுக்கூடமாக மாறிய அவலம்

பூங்காவில் காலி மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் குவிந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-03-17 08:47 GMT

பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள்

காஞ்சிபுரம் மாநகராட்சி, 34வது வார்டு தெய்வசிகாமணி நகரில், கடந்த 2015ல், 24 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைத்து, அதில் சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீரூற்று, இரவில் ஒளிரும் மின்விளக்கு, நடைபயிற்சிக்கான நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இப்பூங்காவை, தெய்வசிகாமணி நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள எம்.எம்.அவென்யூ, ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கின்போது பூங்கா மூடப்பட்டது. அதன்பின் திறக்கப்படவில்லை. பராமரிப்பு இல்லாததால் பூங்காவில் செடி, கொடிகள் புதர்போல மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, மின் விளக்குகளும் பழுதடைந்து உள்ளன.

இரவு நேரத்தில், சமூக விரோதிகள் பூங்காவை மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். பூங்காவில் காலி மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் குவிந்துள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெய்வசிகாமணி நகரினர் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags:    

Similar News