எச்சில் இலை மீது உருண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
Update: 2023-12-07 06:13 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தார் விருபாஷீஸ்வரர், கருப்பணார் கோவில்களில் மஹந்யாச பூர்வகருத்ரா அபிஷேக விழா நேற்று நடைபெற்றது. அதில் பூர்வ ஏகாதேசருத்ரா அபிஷேக தீபாராதனையை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் விருபாஷீஸ்வரர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 1,500க்கும் மேற்பட்டோருக்கு வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடித்த பின் எச்சில் இலையை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டனர். இதையடுத்து திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்பட பல்வேறு வேண்டுதலுடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், அந்த எச்சில் இலை மீது உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். உருண்டு முடித்த பின், எச்சில் இலைகளை தலைகளில் சுமந்து சென்று அப்புறப்படுத்தினர். இப்படி நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்தகாரியம் கைகூடும் என, பக்தர்கள் கூறினர்.