பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா
பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி ஏகனாபுரம் கிராமத்தில் கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்காக சுமார் 4900 ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் , நீர்நிலைகள் உள்ளிட்டவை கையகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் ஒருங்கிணைந்து 486 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நிலம் கையகப்படுவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் துவக்கி உள்ளது. இதற்காக வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் நேற்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை புரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையொட்டி நுழைவு வாயில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.15 பேர் கொண்ட விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசை சந்தித்து, மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது வருவாய் கோட்டாட்சியர் ரம்யா மற்றும் வட்டாட்சியர் புவனேஸ்வர் , வருவாய்த்துறை அலுவலர்கள் காவல்துறையினர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து எதிர்ப்பு கூட்டமைப்பினர் நுழைவு வாயில் முன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட போது அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இந்த செய்தியை அறிந்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலை முன்பு கருப்பு கொடி ஏந்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய நிலையில் காவல்துறை அவர்களை சமாதானம் செய்ய முற்பட்டபோது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்தால் மட்டுமே தாங்கள் கலைந்து செல்ல இயலும் என தெரிவித்தனர். இத்தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்தப்பட்ட பின் உடனடியாக கைது செய்யப்பட்ட 12 பேரும் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் கிராமத்துக்கு திரும்பிய பின் அவர்களை கண்டதும் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து இது குறித்து அனைத்து கிராம பொதுமக்களும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தனர்.