தனியார் மாட்டு தீவன தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா
காஞ்சிபுரம் அடுத்த கிழம்பி கிராம ஊராட்சியில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி பிரகாஷ் கால்நடை தீவன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு தீவன உற்பத்தி ஈடுபடும் நிலையில், அதிலிருந்து வெளிவரும் புகை நச்சுத்தன்மையாக மாறி உடல்நல தீங்கு ஏற்படுவதாகும், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மக்கள் மன்றத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தொழிற்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக முன்பு இதே நிலை நீடித்த போது, அதற்குண்டான தீர்வு கண்ட நிலையில், தற்போது மீண்டும் இதே நிலை தொடர்ந்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை அவர்களிடம் கூறியும் செவிசாய்க்கவில்லை என கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக இக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் பொது மக்களுக்கு உடல்நல தீங்கு ஏற்படுத்தும் இந்த நிறுவன உரிமையாளர் பிரகாஷ் ராவ் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட குழுவிடம் காவல்துறை ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் அவர்களை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு தற்போது அவரிடம் நிலைமையை எடுத்துரைத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.