அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட நாள் கோரிக்கையான டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது . இந்த பாதிப்பில் இருந்து மீள நோயாளிகள் தொடர்ந்து தங்களை டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர். டயாலிசிஸ் செய்வதற்காக நோயாளிகள் பெரும்பாலும் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கிட்னி சுத்தம் செய்வதற்கான டயாலிசிஸ் பிரிவினை மருத்துவ அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி தலைமை தாங்கினார். உடையார்பாளையம் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ரவிசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவர்கள் ராஜவன்னியன், டாக்டர் செந்தில்குமார் மற்றும் தலைமை செவிலியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நம்பிக்கை மைய ஆலோசகர் முருகானந்தம் மற்றும் மருத்துவ குழுவினர்கள் மருத்துவ பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.முடிவில் அரசு மருத்துவர் டாக்டர் மதியழகன் நன்றி கூறினார்.
மூன்று புதிய டயாலிசிஸ் மிஷின்கள் மற்றும் உபகரணங்களுடன் சுமார் 50 லட்சம் மதிப்பில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று இருக்கைகளளில், இரண்டு ஷிப்டுகளில் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க உள்ளதாக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பானுமதி தெரிவித்தார். மேலும் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை இனி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். இதனால் டயாலிசிஸ் நோயாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.