திண்டுக்கல் : புதிய பாலங்கள் அமைக்க ரூ.9.26 கோடி நிதி ஓதுக்கீடு
''சிறுமலை, மாங்கரை ஆறுகளின் நீர்வரத்து பாதைகளில் 3 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்க அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவின்படி ரூ.9.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 15:07 GMT
ஆத்துார் ஒன்றியம் தொப்பம்பட்டி, காந்திகிராமம் ஊராட்சி பகுதிகளில் ஏராளமானோர் காய்கறி, திராட்சை, பூ சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். மலையடிவார பகுதிகளில் விளையும் விலை பொருட்களை திண்டுக்கல் மார்க்கெட் ,வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல சிறுமலை நீர்வரத்து கோடை பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குறுகிய பாலமாக உள்ள சூழலில், சிறுமலை அடிவார பாசன விவசாயிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். தொப்பம்பட்டி-ஜாதிக்கவுண்டன்பட்டி இடையே நீர்வரத்து பாதையில், புதிய பாலம் தொடர்பான கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மாங்கரையில் இருந்து கணேசபுரம் செல்லும் வழித்தடத்தில், மாங்கரை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் இப்பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைகள் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மனு அளித்தனர். இதையடுத்து நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1 .47 கோடி மதிப்பில் சிறுமலை அடிவாரத்திலும், ரூ. 3 .58 கோடி மதிப்பில் மாங்கரை ஆற்றிலும், சில்வார்பட்டி அருகே முத்தனம்பட்டி-கதிரையன்குளம் இடையில் நீர் வரத்து ஓடையில் ரூ. 4.19 கோடி மதிப்பில் பாலங்கள் அமைக்க அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன.