பாபநாசத்தில் சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

பாபநாசத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-04-10 12:12 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் வயலில் உள்ள ஒரு கல்லில் எழுத்துகள் காணப்படுவதாக அவ்வூரைச் சார்ந்த ராமபாரதி, விக்னேஷ்வரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில் இன்று இராஜகிரி என்று அழைக்கப்படும் ஊரின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த இப்பகுதியில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி மாறன் மற்றும் பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் கள ஆய்வு செய்து கண்டறிந்து கூறியதாவது :

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப்பெயர் இராசகேசரி என்பதாகும். இம்மன்னன் பெயரால் இவ்வூர் இராசகேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பெற்றது. இப்பெயர் காலப்போக்கில் மருவி இன்று இராசகிரி என்று அழைக்கப் பெற்று வருகிறது. காவிரியின் தென்கரைத் தலங்களான கோவில்தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் கோயில், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில், நல்லூர் கோயில் போன்றவை இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டே இயங்கி வந்துள்ளன.  மேற்கண்ட இவ்வூர் கோயில்களில் சோழர், பாண்டியர், விஜயநகர நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

முதலாம் பராந்தக சோழன் (907–935) காலம் தொடங்கி முதலாம் ஆதித்த சோழன் (966–971) காலம் வரை இப்பகுதி இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்தே அமைந்திருந்ததை அறிய முடிகின்றது.  முதலாம் இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு முழுமையும் அளக்கப்பெற்றது. அவ்வாறு அளந்து வளநாடு, நாடு, கூற்றம், ஊர் எனப் பிரிக்கப்பெற்று ஆட்சி நடைபெற்றது. இவ்வாறு பிரிக்கப்பட்டபோது இப்பகுதி நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டு இராசகேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பெற்றது.  சோழர்களுக்குப் பிறகு ஏற்பட்ட விஜயநகர நாயக்கர் ஆட்சி காலத்தில் இங்குள்ள கோயில் புதுப்பிக்கப்பெற்று கோயிலின் இறைவர் பாபநாச பெருமாள் என்று பெயர் சூட்டப்பெற்று கல்வெட்டாகப் பொறித்துள்ளனர்.

அன்றிலிருந்து இவ்வூர் பாபநாசம் என்று அழைக்கப்பெறுகிறது.  பாபநாசப் பெருமாள் கோயிலே இன்றைய சீனிவாசப் பெருமாள் கோயிலாகும். தற்போதைய பாபநாசத்தில் தெற்கே குடமுருட்டி ஆற்றுக்கும் வடக்கே அரசலாற்றுக்கும் இடையே அமைந்துள்ள பகுதி அரையபுரம் தட்டாங்கல் படுகை என்று அழைக்கப்பெறுகின்றது. இங்கு தர்மராஜ் என்பவரின் வயலில் நீரிறைக்கும் மோட்டார் பகுதியை ஒட்டியும் நீர் வெளியேறும் கால்வாய் பகுதியை ஒட்டியும் நான்கு துண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பெற்றன. இக்கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால எழுத்தமைதியுடன் காணப்படுகின்றன.

நான்கு துண்டு கல்வெட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவையாகக் காணப்படுவதோடு முழுமையாகவும் இல்லை.  கல்வெட்டு காணப்படும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் சோழர் காலத்தைய கோயில் ஒன்று முற்றிலுமாகச் சிதைவடைந்து அழிந்திருக்க வேண்டும். அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவையாக இத்துண்டு கல்வெட்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கல்வெட்டு வரிகளைப் படித்தறிந்தபோது இராசேந்திர சோழ விண்ணகரம் என்ற கோயிலுக்கு நிலக்கொடை வழங்கியதைப் பற்றியதாக இருக்கலாம் என அறிய முடிகிறது.

அதிலுள்ள வாசகங்களில் மங்கலம், பிறவிகலாஞ்சேரி, கலாகரச்சேரி போன்ற இடங்களின் பெயர்களும் நக்கன் நித்தவிநோதகன், ஸ்ரீகண்டன், மும்முடிச் சோழ சோழவரையன் போன்ற பெயர்களும், மணல்பெறும்வதி, ஆதித்தவதி, ஸ்ரீகண்டன் வாய்க்கால் என்ற வாய்க்கால்களின் பெயர்களும் நில எல்லை, மா, குழி, விலையாவணம் போன்ற நில அளவு குறித்த சொற்களையும் காண முடிகின்றது. சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்தவதி, ஸ்ரீகண்டன் வாய்க்கால் போன்ற நீர்நிலைகளின் பெயர்களும், கலாகரச்சேரி என்ற வாழ்விடப் பகுதியும் குறிக்கப்பெற்றுள்ளதை ஒப்பு நோக்கலாம் என்று கூறினர். கல்வெட்டுப் படமும் பொறிக்கப்பட்டுள்ள விவரங்களும் கீழே:

கல்வெட்டு – 1 1. டகமநர் சொறுவதிக்கு மெற்கு மநொரம வாய்க்காலு 2. ட்டசதுக்கத்து நாலாம்படகம் ஆதித்தவதிக்கு மெற்கு மநொ 3. ங்கலத்து மெற்கு இரண்டாங் கண்ணாற்று ஸ்ரீகண்ட வாய்க்காலு தெற்கு 4. ம கரணத்தால் கொண்டு எண் ஈப்புபெறு உடைய இவொன்பது மாநிலம் 5. கைகொண்ட நிலவொன்பது மா இவ்வென்பது மாநிலம் 6. திரசொழ விண்ணகர் அமைநென் இநிலம்னெபது மாவும் 7. யன்கச் செல்லவும் கொண்டு இந்நிலம் ஒன்பது மாவும்ப 8. வெய் விலையாவணமும் இதுவெய் பொருள்மாவ கல்வெட்டு – 2 1.ஒன்றெ னான்கு மாக்குழி ஒன்றெ முன்றும் 2. குடுத்து இந்நிலங்கள் பிறவிகளாந்செரிகளில் 3. யும் தண்டமிட்டும் மிறுப்பித்தும் இன்னில 4. ந்த விளகனான் மும்முடிசொழ சொழியவரை 5. ங்தனக்கந் நித்விடகனென் இப்படி பணியா 6. ணினென் இ்பபடி பணியால் மத்தியஸ்தன் கல்வெட்டு – 3 1.பதிமங்கலத்து யாளுங்கணத்தார் கலாகரச்செரி கிரநடி 2. வாய்க்காலுக்கு தெற்கு கிழக்கு நின்று இரண்டாங் கண்ணாற்று வ 3. ரியன்னென் இருதட்டப்பட்ட நான் மா செய்குமாய் ப்ரமாக இச் கல்வெட்டு – 4 1. ன் யுற்றூக்கு 2. ல் முதல் பொத்தகங் 3. கள் இறைஇலில் 4. யனுக்கு ஸ்ரீராஜா 5. மத்தியஸ்தன் அமு 6. ஸ்ரீகண்டன் கரப

Tags:    

Similar News