வெற்றிலையில் நோய் தாக்கம் - விவசாயிகள் பாதிப்பு
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், வாழப்பாடி பகுதிகளில், 3,500 ஏக்கரில், வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் கறுப்பு ரகம், கோவை, கடலூர், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அந்தரக, 'பீடா' எனும் சக்கை வெற்றிலை, ராஜஸ்தான், மஹாராஷ்டிராவுக்கும், வெள்ளைரக வெற்றிலை, பெங்களூரு, குஜராத் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது
. இரு மாதங்களாக, கோடை வெயில் தாக்கம் அதிகரித்து, வாடல், செவட்டை ஆகிய பூச்சி தாக்குதலால், வெற்றிலை வளர்ச்சி இல்லாமல் சுருண்டு காணப்படுகிறது பருவ மழை இல்லாததால், விளைச்சல் குறைந்து உள்ளது. அதனால், வெற்றிலை மார்க்கெட்டுக்கு, வரத்து குறைந்துள்ளது.
கெங்கவல்லி வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது வெற்றிலை பயிரில், நோய் தாக்கம், மழை இல்லாததால், கெங்கவல்லி மட்டும் அதன் சுற்றுப்புற 500 ஏக்கருக்கு மேல், வெற்றிலை பயிர் அழிந்துவிட்டது. தற்போது, வெயிலில் தீவிரத்தால், வெற்றிலை கருகி வருகிறது. ஏக்கருக்கு, 15 முதல், 20 ஒத்துவரை கிடைத்த வெற்றிலை, தற்போது, ஐந்து ஒத்து(ஒரு ஒத்து 60 கவுலி; ஒரு கவுலி-100 வெற்றிலை) வரை, மகசூல் உள்ளது. அதை பறிக்கும் தொழிலாளர்களுக்கு, கூலி கூட வழங்க முடியாத நிலை உள்ளது. வெற்றிலை பயிருக்கு, வறட்சி நிவாரணம் கேட்டு மனு செய்தும், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.வெற்றிலை வியாபாரிகள் கூறுகையில், 'வெள்ளை ரக வெற்றிலை 3,000 முதல், 3,500 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. பீடா, கழிவு(சக்கை) வெற்றிலை, 2700 ரூபாய் வரை விலைகிடைக்கிறது. நோய் தாக்கத்தால் விலை குறைந்துவிட்டது' என்றனர்.