ஊராட்சி பதவிகளை கலைத்தால் வழக்கு
ஊராட்சிகளின் பதவி காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என ரிஷிவந்தியம் ஒன்றிய ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரிஷிவந்தியம் ஒன்றிய ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் பகண்டைகூட்ரோட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சிலம்பன், செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 5 ஆண்டுகளாகும்.
அதற்குள் ஊராட்சிகளின் பதவி காலத்தை கலைப்பது என்பது அரசியலமைப்புக்கு எதிரானது, எனவே, ஊராட்சி பதவியை கலைக்ககூடாது, இதையும் மீறி ஊராட்சிகளின் பதவி காலம் கலைக்கப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.