வாக்காளர்களுக்கு பணம் வினியோகம்: ரூ.26,500 பறிமுதல்!
வேலூர் தொரப்பாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த ஒருவரை பறக்கும் படையினர் பிடித்துள்ளனர்.
Update: 2024-04-14 11:19 GMT
வேலூர் தொரப்பாடி ஜீவா நகரில் பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தனர். அதில் ஒருவர் பறக்கும் படையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மற்றொருவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ.26,500 மற்றும் பூத் சிலிப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் காஞ்சீபுரம் ஆதிசங்கரர் தெருவை சேர்ந்த மாதவன் (44) என்பதும், தப்பியோடியவர் நேரு என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ராஜேஸ்வரி பாகாயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதவனை கைது செய்தனர்.