வாக்களிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் செயல் விளக்கம்
மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது, என்பது குறித்து விளக்கும் வகையில் செயல்விளக்க மையங்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 18ம் தேதி அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க மையத்தில், ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கற்பகம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து அங்கிருந்த பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா , தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.