இராமகிருஷ்ணாபுரத்தில் சமுதாயக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைப்பு

இராமகிருஷ்ணாபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.39 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.

Update: 2024-06-13 12:10 GMT

சமுதாய கூடத்தை திறந்து வைத்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சி, இராமகிருஷ்ணாபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.39 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில் : தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கிராமப் பகுதிகளில் சாலைகளை அமைத்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், சமுதாயக்கூடங்களை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தாலும், அதற்கென்;று ஒரு நிதி வரையறை இருக்கின்றது.

இது போன்ற கட்டிடங்களை அரசின் திட்டம் மூலமாக மட்டுமே கட்டுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதனால் தான் அதனை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டத்தில் 50 விழுக்காடு நிதியினை பொதுமக்களோ, நன்கொடை மூலமாகவோ,

தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, அங்கு இருக்கக்கூடிய சமுதாய அமைப்புகள் மூலமாகவோ, செயல்படக்கூடிய கோவில்களினுடைய உபரி வருமானத்தின் மூலமாகவோ செயல்படுத்தினால் மீதிமுள்ள 50 சதவீத நிதியினை அரசு தருகிறது. இந்த திட்டத்தை அந்த ஊர் மக்களே செயல்படுத்தலாம். மேலும், திட்ட பணிக்கான மொத்த செலவினத்தில் மூன்றில் ஒரு பகுதி பொதுமக்கள் அல்லது தனியார் அமைப்புகளில் இருந்து தரும்போது, மீதி இருக்கக்கூடிய இரண்டு பங்கு அரசு தருகிறது.

மேலும், ஒரு கிராமத்திற்கு சமுதாயக்கூடம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த மாதிரி ஒரு சமுதாயக்கூடம் ஏற்படுத்துவது என்பது அந்த கிராமத்திற்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைய நன்மைகளை நேரடியாகவும், மறைமுகவாகவும் செய்யக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது. எனவே, இப்படிப்பட்ட கட்டிடங்களை அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக செயல்படுத்தி வருகிறது. முழுமையாக அரசு திட்டங்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பங்களித்து செயல்படுத்துவதற்கு தான் நமக்கு நாமே திட்டத்தினை அரசு வழங்கி இருக்கிறது. அதனை நன்கு பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News