கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ன்கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டு இருந்த உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு உணவினை ஊட்டி மகிழ்ந்தார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களிடம் குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் சுவையாக உணவு சமைத்து வழங்குமாறு உத்தரவிட்டு, குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம், குழந்தைகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை, மருந்து பொருட்களின் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கான படுக்கை வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை உரிய காலத்தில் வழங்கி அவர்களது உடல்நலனை காத்திடும் வகையில் சேவை மனப்பான்மையுடன் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஆரியூர் மற்றும் ஆமப்பாறை பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 4.71 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானத்திற்கு எரிமேடை, சுற்று சுவர், கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதையும் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா பார்வையிட்டார்.