மொழியின் பெருமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேச்சு

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் மொழியின் பெருமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசினார்.

Update: 2024-03-15 16:20 GMT

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஒரு இலக்கியத்தின் வளமையை செழுமையாக்குவதற்கும், மற்ற மொழிகளில் உள்ள நன்மைகளை பெறுவதற்கும், நம் மொழியின் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் பயன்படுகிறது அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நடைபெற்ற "மொழிபெயர்ப்பு இலக்கியம்" குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசினார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவாங்கர் கலை கல்லூரி தமிழ் துறை இணைந்து "மொழிபெயர்ப்பு இலக்கியம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தேவாங்கர் கலைக் கல்லூரி தமிழ் துறை தலைவர் ஸ்டீபன் பொன்னையா வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் கலந்து கொண்டு மாணவர்களிடைய கலந்துரையாடினார். இந்த கருத்தரங்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஒரு இலக்கியத்தின் வளமையை செழுமையாக்குவதற்கும், மற்ற மொழிகளில் உள்ள நன்மைகளை பெறுவதற்கும், நம் மொழியின் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் பயன்படுகிறது. தமிழில் உள்ள இலக்கியங்களை பிற மொழியில் மொழிபெயர்ப்பதாலும் பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்ப்பதாலும்தான் கடந்த காலங்களில் நமது இலக்கிய செல்வங்கள் வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. தமிழ் பக்தி இலக்கியங்களின் தாக்கம் இன்றளவும் பல நாடுகளில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இந்தோனேசியாவில் பாலி மொழியில் கூட பல திருப்பாவை வாக்கியங்கள் கலந்துள்ளன என மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இறுதியாக தமிழ் துறை பேராசிரியை ஜெயந்தி நன்றி உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு, பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News