பெரம்பலூர் மாவட்டத்தில் உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.
By : King 24x7 Angel
Update: 2024-01-30 06:41 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புற்றுநோய், சிறுநீரக நோய், டயாலஸிஸ் செய்பவர்கள், எச்.ஜ.வி, காசநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு, எந்த ஒரு வேலையும் செய்ய இயலாத நிலையில் வாழ்வாதாரத்திற்கே பொருளீட்ட இயலாத நிலையில் உள்ள பெரம்பலூர் வட்டத்தைச் சார்ந்த 11 நபர்களுக்கும், ஆலத்தூர் வட்டத்தைச் சார்ந்த 24 நபர்களுக்கும், குன்னம் வட்டத்தைச் சார்ந்த 14 நபர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தைச் சார்ந்த 11 நபர்களுக்கும் என மொத்தம் 60 நபர்களுக்கு வருவாய்துறையின் சார்பில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார். மேலும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த ஜெயபால் என்பவர் இயற்கை மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ.22,500 இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்..