திமுகவும்,பாஜகவும் சேர்ந்து எங்களை ஒழிக்க பார்க்கிறது - காளியம்மாள்

நாம் தமிழர் கட்சியின் மீதான பொறாமையின் காரணமாக பாஜகவும், திமுகவும் கூட்டு சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கிறது. எங்கள் எண்ணத்தையே சின்னமாக வைத்து தமிழகத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம் என காளியம்மாள் தெரிவித்தார்.

Update: 2024-03-26 01:47 GMT

செய்தியாளர் சந்திப்பு 

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் காளியம்மாள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் அங்கம் வகிக்கும் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தேர்தல் ஆணையத்தில் மறுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டு அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அளிக்கப்படுகிறது. சின்னத்திற்காக இன்றைய தினம் வரை போராடிக் கொண்டிருக்கிறோம். நாளை எங்களுக்கு சின்னம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் சக்திகள் எளிய மக்களை எந்த அளவிற்கு அவர்களின் உரிமையை பறிக்கிறார்கள் என்பதற்கு இது தான் உதாரணம். பணம் கொடுத்து ஓட்டு வாங்கியதை மாற்றி தமிழகத்தில் 31 லட்சம் வாக்குகள் வாங்கி மூன்றாவது கட்சியாக வளர்ந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பொறாமையின் காரணமாக பாஜகவும் திமுகவும் கூட்டு சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கிறது. எங்கள் எண்ணத்தையே சின்னமாக வைத்து தமிழகத்தில் பரப்புடைய மேற்கொண்டு வருகிறோம். இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரச்சனைகள் மயிலாடுதுறை தொகுதியில் நிலை மாறாமல் அப்படியே உள்ளது.

நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. பாபநாசத்தில் சர்க்கரை ஆலையை சாராய ஆலையாக மாற்றி இருப்பது வளத்தை சீரழிக்கிற நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுதான் திராவிடமாடல். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டோம் என்று சொன்ன காங்கிரசுக்கு 10 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் மயிலாடுதுறையில் நிற்கிறது. அதை தோற்கடிப்போம். சின்னம் ஒரு பிரச்சனை இல்லை மக்களை சிந்திக்க வைப்பதே எங்களின் முதல் வேலை. என்றார்.

அப்போது  மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ், மண்டல செயலாளர் கலியபெருமாள், மாநில சுற்றுச்சூழல் துறை பாசறை துணைத் தலைவர் காசிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேட்டியளிக்க அனுமதி கிடையாது என்று காவல்துறையினர் கூறியதால் போலீசாரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

Similar News