திமுக நடத்தியது விழ்ச்சி மாநாடு:முன்னாள் அமைச்சர்
மதுரையில் அதிமுக நடத்தியது எழுச்சி மாநாடு எனவும், சேலத்தில் திமுக நடத்தியது விழ்ச்சி மாநாடு எனவும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.;
சென்னையில் பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
இந்த நிலையில் பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசையும் பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்றது.
எழுச்சி மாநாடு எனவும் அதிமுகவிற்கு போட்டியாக சேலத்தில் திமுக நடத்திய இளைஞர் அணி மாநாடு என்பது ஒரு கேலிக்கூத்து என விமர்சனம் செய்தார். மேலும் அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ் கலாச்சாரம் ஒலித்தது என்றார். மேலும் மதுரையில் அதிமுக நடத்தியது எழுச்சி மாநாடு ஆனால் சேலத்தில் திமுக நடத்தியது விழ்ச்சி மாநாடு என விமர்சனம் செய்தார்.
மேலும் இந்த மாநாட்டிற்கு பின்னர் திமுகவுக்கு வீழ்ச்சி தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வியை சந்திக்க போகிறது எனவும் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றார் மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி டெல்லிக்கு சென்று தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற முடியாதவர்கள் ஆட்சியை விட்டு விலகுங்கள் என்றார்.
மேலும் மக்களுக்கு மழை நிவாரணம் வழங்க டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என்று சொல்லும் திமுக அரசு தமிழ்நாட்டில் வருகின்ற வருமானம் என்னாச்சு என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு மூன்று லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது எனவும் இந்தியா வில் கடன் வாங்கியதில் 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என தெரிவித்த கே.டி. இராஜேந்திர பாலாஜி கடன் வாங்கிய 3 லட்சம் கோடியில் திமுக அரசு என்ன ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்தது எனவும் இந்த 3 லட்சம் கோடி கடன் குறித்து வெள்ளை அறிக்கை தமிழக அரசு வெளியிட வேண்டும் என கேட்டு கே.டி. இராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.