போளூருக்கு வந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணி
Update: 2023-11-19 05:24 GMT
திமுக இளைஞரணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி அக்கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி தொடங்கியுள்ளது. இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். 8 ஆயிரத்து 647 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது. இந்த வாகன பேரணி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மலை மாவட்டம் போளூரில் திமுக இளைஞரணி சார்பில் கன்னியாகுமரியில் இருந்து போளூரை நோக்கி வருகை தரும் இரு சக்கர வாகன பேரணியை வெகு விமர்சையாக வரவேற்று போளூரில் முக்கிய வீதிகளான பஜார் வீதி சிந்தாதிரிப்பேட்டை தெரு, வீரப்பன் தெரு, அல்லிநகர், பைபாஸ் சாலை, வேலூர்-திருவண்ணாமலை சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக இரு சக்கர பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து போளூர் பேருந்து நிலையம் அருகே நீட் விலக்கு, நம் இலக்கு என்ற வாசக முழக்கத்தோடு பொதுமக்களிடையே நீட்டை ஒழிப்போம் மாணவர்களை காப்போம் என்ற கையெழுத்து நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி சேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் எஸ் நரேஷ் குமார், போளூர் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், களம்பூர் பேரூராட்சி தலைவர் கே.டி.ஆர். பழனி, போளூர் நகர செயலாளர் தனசேகரன், பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன், இளைஞர் அணி மாவட்ட இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ராமோகன், கலாம் பாட்ஷா, செந்தில்குமார், ஹரிகரன், பரணிதரன், மணிகண்டன், சாது ஆனந்த், கே.வி.ஆர் சுரேஷ், விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட திமுகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.