குடும்பத்துக்காக கொள்ளையடிப்பது தான் திமுகவின் குறிக்கோள் - பழனிச்சாமி

குடும்பத்துக்காக கொள்ளையடிப்பது ஒன்றே திமுகவின் குறிக்கோள் என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

Update: 2024-03-28 03:48 GMT

குடும்பத்துக்காக கொள்ளையடிப்பது ஒன்றே திமுகவின் குறிக்கோள் என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பேசினார். 

நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேன், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ராணி ஆகியோருக்கு வாக்குகேட்டு அதிமுக பொதுசெயலாளர் பழனிச்சாமி பேசினார். அவர் பேசுகையில்; 

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழில், சுற்றுலா ஆகியவை முக்கிய வாழ்வாதாரம் ஈட்டும் தொழிலாக உள்ளது. நான் ஒரு விவசாயி என்ற நிலையில் இதில் உள்ள ஏற்ற தாழ்வுகள் தெரியும்.  பாஜக, காங்கிரசை சேர்ந்தவர்கள் தான் மாறி மாறி வந்துள்ளனர்.  இந்தமுறை மீனவ சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெற செய்தால் நல்ல திடங்கள் கிடைக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

 ஆனால் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. 520 திட்டங்களுக்கான அறிவிப்பை வாக்குறுதியாக கூறி அதில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்ததும் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் கைவிடுவதும் திமுகவின் கைவந்த கலை. திமுகவில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தனது குடும்பத்தினர் என கூறும் ஸ்டாலின், கட்சியை சேர்ந்த ஒருவரை திமுக தலைவரானதை கூறமுடியுமா? குடும்பத்தை சேர்ந்தவர்களே அந்த பொறுப்பிற்கு வருகின்றனர். 

ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் அதிமுகவில் அப்படியல்ல. சாதாரண கிளை கழக செயலாளராக இருந்த நான், இந்த நிலைக்கு வந்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகும். அவர்களின் குடும்பம் வளமாக இருப்பதற்காக கொள்ளையடிப்பது ஒன்றே குறிக்கோள். பொதுமக்களை வதைக்கும் வகையில் வீட்டு வரியிலிருந்து குப்பை வரிவரை அனைத்து வரியையும் உயர்த்தியுள்ளனர். திமுக ஆட்சியில் சட்டம், ஒருங்கு சந்தி சரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. திமுகவில் மட்டும் தான் போதை பொருள் கடத்துவதற்கென்றே அயலக அணி என்ற பிரிவு உள்ளது.      போதை பொருட்கள் புழக்கத்தை திமுக ஆட்சியில் தடுக்க முடியவில்லை. கல்லூரி, பள்ளி அருகே போதை பொருள் விற்ற 2135 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 

மற்றவர்கள் அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் கைது செய்யவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக உள்ளார். நீட் தேர்வு ரத்து என நாடகமாடும் திமுக 2010ல் அதை கொண்டு வருவதற்கு காங்கிரசுடன் இணைந்து காரணவாதியாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்து நிறைவேற்றிய திட்டங்களை தற்போது திமுக புதிதாக திறந்து வைக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு எல்லாம் திமுக உரிமை கோரி வருகிறது.      தமிழகத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் குடிநீர் திட்டம் உட்பட பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்துள்ளோ்ம். சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். கூட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News