மதுரை சித்திரைத் திருவிழாவின்போது தென்மாவட்டங்களில் தேர்தல் வேண்டாம்!

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது தென்மாவட்டங்களில் தேர்தல் வேண்டாம் என தேர்தல் கமிஷனுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை.

Update: 2024-02-20 16:10 GMT

மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், ஆற்றில் அழகர் இறங்கும் நாளில் தென்மாவட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டாம் என போலீஸ், அறநிலையத்துறை கேட்டுக்கொண்டதன்பேரில் அந்நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டாம் என தேர்தல் கமிஷனுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.மதுரையில் 10 நாட்கள் நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவும், கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சியும் உலகப்புகழ் பெற்றவை. இத்திருவிழாவில் மதுரை உட்பட தென்மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் வீட்டு விழாவாக கருதி ஜாதி, மத பேதமின்றி கூடுவர்.இந்தாண்டு சித்திரைத்திருவிழா ஏப்.,12 கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. ஏப்.,21 மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்.,22ல் தேரோட்டம் நடக்கிறது. ஏப்.,23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு மதுரை உட்பட வெளியூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 5 அல்லது 6 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. அதில் சித்திரைத் திருவிழா நாட்கள் இடம்பெற்றால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். ஓட்டு சதவீதமும் குறையும் என போலீசாரும், ஹிந்து சமய அறநிலையத்துறையினரும் தேர்தல் ஆலோசனைக்கூட்டங்களில் வலியுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் சித்திரைத் திருவிழா நாட்களில் தென்மாவட்டங்களில் தேர்தல் நடத்தவேண்டாம் என தேர்தல் கமிஷனுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.போலீஸ் தரப்பில் கூறியதாவது: 2019ல் சித்திரை திருவிழா நடந்தபோது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. பெரும் சிரமத்திற்கு இடையே தேர்தலுக்கும், திருவிழாவுக்கும் பாதுகாப்பு அளித்தோம். இந்தாண்டு திருவிழா நாளில் தேர்தல் நடத்தவே கூடாது என கலெக்டர் வழியாக தேர்தல் கமிஷனுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் நடக்கும்பட்சத்தில் மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களிலும் ஓட்டு சதவீதம் குறையும் என தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் திருவிழா நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என நம்புகிறோம் என்றனர்.
Tags:    

Similar News