ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டில் தீர்ப்பு.
Update: 2024-04-02 10:24 GMT
சேலம் அம்மாபேட்டை வடபுறம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 24), டிரைவர். இவர் தனது தங்கையை நண்பரான நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (32) என்பவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். அம்மாபேட்டை பெரியார் நகரை சேர்ந்த செல்வம் (25), கிருஷ்ணன்புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணன் (24) ஆகியோர் நண்பரான கோபியை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம் ஏன்? உன் தங்கையை அவனுக்கு கட்டி கொடுத்தாய் என்றும், நல்லா பார்த்து கொள்வானா? என்றும் கேட்டுள்ளனர். இதுபற்றி தனசேகரனுக்கு தெரியவந்தது. அவர் செல்வம் மற்றும் கிருஷ்ணனை சந்தித்து பேசினார். என்னை பற்றி கோபியிடம் தவறாக கூறி எனது மனைவியை என்னுடன் வாழவிடாமல் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி கோபி, தனசேகரன் மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகியோர் செல்வம், கிருஷ்ணனை அம்மாபேட்டையில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் கோபி, தனசேகரன், 18 வயது சிறுவன் மற்றும் தாதம்பட்டியை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து செல்வம், கிருஷ்ணணை அடித்து கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து தனசேகரன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்தது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனின் வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. மற்றவர்களின் மீதான விசாரணை அதே கோர்ட்டில் தொடர்ந்து நடந்தது. வழக்கு விசாரணையின் போது கந்தசாமி இறந்துவிட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 2 பேரை கொலை செய்த குற்றத்திற்காக தனசேகரன், கோபி ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார். சிறுவனின் மீதான வழக்கு நடந்து வருகிறது.