தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள்: கனிமொழி எம்பி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.515.72 கோடியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேதுராமலிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி , மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (22.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:,
ூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி (61), ஓட்டபிடாரம் (88) கயத்தார்(18) கோவில்பட்டி (22), புதூர் (83) மற்றும் விளாத்திகுளம் (93) ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.515.72 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் தற்போதைய (2024), இடைக்கால (2039) மற்றும் உச்சகட்ட(2054) மக்கள் தொகை முறையே 3,04,766 மற்றும் 3,50,821 மற்றும் 3,96,376 ஆகும். மேலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம், இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவைகள் முறையே 13.59 மற்றும் 16.57 மில்லியன் லிட்டர் ஆகும்.
இத்திட்டத்தில் நாளொன்றுக்கு தேவையான 16.57 மில்லியன் லிட்டர் குடிநீரை தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு கருங்குளம் ஒன்றியம் அகரம் ஊராட்சியைச் சார்ந்த அகரம் கிராமத்திற்கு அருகில் நீர் எடுக்கும் கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, அதிலிருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு சேதுராமலிங்கபுரம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் 239 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் 20.35 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு மணியாச்சியில் அமைந்துள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. மணியாச்சியிலுள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியிலிருந்து 33 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் மணியாச்சியில் அமைந்துள்ள உயர்மட்ட நீர்தேக்கத் தொட்டி மற்றும் 145 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் 39 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு மந்தித்தோப்பு உயர் மட்ட தொட்டிக்கும் குடிநீர் ஏற்றப்படுகிறது.
இவ்விரண்டு உயர்மட்ட நீர்தேக்கத் தொட்டிகளில் இருந்து 42 ஊராட்சி தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலிருந்து 60 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கும், மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 356 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 92,407 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 31.03.2023-ல் வழங்கப்பட்டு தற்போது பணிகள் 73 விழுக்காடு முடிவடைந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது இத்திட்டம் வருகின்ற அக்டோபர் 2024ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் பொழுது 3,96,376 மக்கள் பயன் அடைவார்கள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலியாவூர் கிராமத்தில் அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி , மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (ஊரகம்) ராஜா, செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக்கோட்டம்) வசந்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (ஊரகம்) உதவி செயற்பொறியாளர் ஜான்செல்வன், உதவி செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக்கோட்டம்) ஆதிமூலம், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (ஊரகம்) உதவி பொறியாளர் கங்காதரன், வல்லநாடு ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.