குடிநீர் தட்டுப்பாடு: தலைவருடன் பெண்கள் வாக்குவாதம்
சேலம் அருகே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தலைவருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினவிழாவையொட்டி நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதன்படி, சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகள் குறித்து பேசினர். அப்போது, ஊராட்சி 3-வது வார்டு சத்யா நகரில் இருந்து வந்திருந்த பெண்கள், தங்கள் பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை என்றும்,
குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை தாசில்தார் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். அதற்கு குடிநீர் வசதி மட்டுமின்றி தார்சாலை, சாக்கடை கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதது ஏன்?, ஓட்டு கேட்கும்போது காலில் விழுந்து கேட்கிறீர்கள்?
அதன்பிறகு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து 3-வது வார்டு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து ஊராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும், நிதி ஒதுக்கீடு விவரங்கள் குறித்தும் பொதுமக்களின் முன்னிலையில் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.