போதைப் பொருட்கள் விழிப்புணர்வு: ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. -

Update: 2024-06-27 00:37 GMT

விருதுநகர் மாவட்டம் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.


விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே உளவியல் ரீதியாக போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது: இன்றைக்கு இருக்கக்கூடிய சமூக சூழலில் ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் மிக முக்கியமான பிரச்சினைகள் என்று கேட்டால் மாணவர்களுடைய பழக்கம் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் இடையேயான சிக்கல்களைப் பற்றி கூறுவார்கள். இன்றைக்கு நிலவக்கூடிய சூழ்நிலையில் சமூகத்தில் போதைப் பழக்க வழக்கத்தினால் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தில் இருக்கக்கூடிய சிக்கல்களின் வடிவம் மாறிகொண்டே இருக்கிறதே தவிர இது எல்லா காலகட்டத்திலும் சமூக ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களில் அவ்வப்போது சில பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் எது சரி, எது தவறு என்று ஆராயக்கூடிய பகுத்தறிவு வயதிற்கு அவர்கள் வருவதற்கு முன்பாகவே நிறைய சூழ்நிலைகளை சந்திக்கிறார்கள். மேலும் பல உளவியல் சார்ந்த சிக்கல்கள் நிறைய வருகின்றது. நண்பர்கள் குழுவில் பெரும்பாலானவர்கள், செய்யும் தவறை செய்ய மறுக்கும் நண்பர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகின்றது என்ற உளவியல் சார்ந்த சிக்கல்களை மாணவர்கள் சந்திக்கின்றனர். அந்த உளவியலில் இருந்து மாணவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

உன்னை பிடிக்காமல் போவதை எதிர் கொள்வதற்கான தைரியத்தை நீ வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு இது குறித்து தொடர்ச்சியாக எடுத்துக்கூறி நல்வழி படுத்த வேண்டும். மேலும், போதை பழக்க வழக்கத்தினால் வரும் பிரச்சனையை கூறும்பொழுது, மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். மாணவர்கள் ஓய்வு நேரங்களில் விளையாட்;டு, மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகள் உள்ளிட்ட மகிழ்ச்சியை தரக்கூடிய பல்வேறு காரணிகள் குறித்து அறிமுகம் செய்து அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

போதை பொருட்கள் மூலமாக உடல் உறுப்புகளை சிதைத்து, போதை கிடைப்பதற்காக தன்னைதானே அழித்துக்கொள்கின்றனர் என்ற உண்மையை புரிந்துகொள்ள செய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் போதைப்பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுக்கும் விதமாக விருதுநகர், காரியாபட்டி மற்றும் இராஜபாளையம் பகுதிகளில் அரசு மறுவாழ்வு மையம் செயல்படுகின்றன. நவீன மருத்துவ முறைகள் மூலமாக அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கும் போது நிச்சயமாக போதை பழக்கவழக்கத்திற்கு எதிரான ஒரு மனிதராக வாழ்நாள் முழுவதும் விளங்க முடியும். நாளை நம்முடைய சந்ததியினர் வாழப்போகும் இந்த பூமியில் இது போன்ற எதிர்மறை காரணிகள் உள்ள இந்த உலகை நேர்மறையாக மாற்ற தொடர்ச்சியாக நாம் செயல்பட வேண்டும்.

அதற்கு ஆசிரியர்களாகிய நீங்கள் மிக உறுதுணையாகவும், முறையான கண்டிப்போடும், கவனத்தோடும் இதை அணுகினால் நிச்சயமாக நமது மாவட்டத்தில்; பள்ளிகளில் மாணவர்களை நல்வழிபடுத்த முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 225 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News