”DRUG FREE TN” செயலியின் பயன்பாடுகள் குறித்த விளக்க கூட்டம்
சிவகங்கை மாவட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போதை எதிர்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ”DRUG FREE TN” செயலியின் பயன்பாடுகள் குறித்த விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்றைய தினம் (13.02.2025) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போதை எதிர்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்களுக்கு ”DRUG FREE TN” செயலியின் பயன்பாடுகள் குறித்த விளக்க கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், தமிழக அரசால் ”DRUG FREE TN” என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியானது, போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் பயன்பாடு குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்திடும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போதை எதிர்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்களுக்கான விளக்க கூட்டம் இன்றையதினம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள ”DRUG FREE TN” ‘என்ற செயலில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். அவ்வாறாக, போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விபரங்களை தெரிவிப்பவரின் தகவல் கோரப்பட மாட்டாது. மேலும், இச்செயலியானது மிகவும் பாதுகாப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள், பான், குட்கா, கஞ்சா, சட்ட விரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அல்லது பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் தெரியும் பட்சத்தில், செயலியில் அதன் தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்தால், உடனடியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்த்துறை ஆகியவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் போதைப் பொருட்களின் பயன்பாடு தடுத்து நிறுத்தப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போதை எதிர்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர், இச்செயலி குறித்து தங்களது பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் எடுத்துரைத்து, மாணாக்கர்களின் பெற்றோர்கள், உறவினர்களின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்திட அறிவுறுத்த வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் ”DRUG FREE TN” செயலி குறித்த விளக்கப் படங்களை மாணவர்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி விளம்பர பலகைகளில் வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணம், சிவகங்கை மாவட்டத்தில் 165 பள்ளிகள் மற்றும் அனைத்து வகையபான 44 கல்லூரிகள் ஆகியவைகளில் மாணவர்களை உள்ளடக்கிய போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுக்கள் (Anti Drug Club) அமைக்கப்பட்டும், இக்குழுக்களின் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவ, மாணவிகளிடையே பல விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று, போதைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து, குறிப்பாக மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அந்தந்த வட்டார அளவில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. அப்போட்டிகளில் தேர்வு பெறுபவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.15,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.10,000/-ம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000/-ம் வழங்கப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவில் தேர்வானவர்கள் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்று முதல் பரிசாக ரூ.1,00,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.75,000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.50,000/-ம் வழங்கப்படவுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் வாயிலாக போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். முன்னதாக, ”DRUG FREE TN” செயலியின் பயன்பாடு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் ஆயம்) பிரான்சிஸ் மற்றும் உதவி ஆணையர் (ஆயம்) ரெங்கநாதன், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போதை எதிர்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.