புயல் எச்சரிக்கை எதிரொலி: கடலுக்கு செல்லாத தஞ்சை மீனவர்கள்!!
புயல் சின்னம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
By : King 24x7 Desk
Update: 2023-12-02 10:03 GMT
புயல் சின்னம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உட்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப் படகுகளும் உள்ளன. விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களிலும், பிறதினங்களில் நாட்டுப் படகு மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டம் கடலோர பகுதியில் விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாலும், கடல் சீற்றமாக காணப்படுவதாலும் கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால் தஞ்சை மாவட்டத்தில், வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், தங்கள் படகுகள் அனைத்தையும் துறைமுகங்களில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.