துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கையம்மன் கோவிலில் பிரம்மாண்டமாக தேரோட்டம் நடைபெற்றது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் லட்சார்ச்சனை தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு துர்க்கையம்மன் கோவில் 33-வது ஆண்டு லட்சார்ச்சனை தேர்த்திருவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது.விழாவையொட்டி மேளதாளங்கள் முழங்க பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்த உடன் அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றது இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை, இரவு 3 காலங்களிலும் அம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த லட்சார்ச்சனை வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பூர்த்தி ஹோமம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று காலை துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் திரளான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். பின்னர் மாலை மின்விளக்கு அலங்காரத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று மாலை 6 மணிக்கு துர்க்கையம்மன் கோயில் வளாகத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை துர்க்கையம்மன் திருவிழா குழுவினர், அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.