நொய்யலில் சாயக்கழிவு கலப்பு - சாய ஆலை சங்கத்தினர் மறுப்பு
திருப்பூரில் மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் நீர் நிறம் மாற சாய ஆலைகள் காரணமல்ல என சாய ஆலை சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது இந்தியாவிலுள்ள அனைத்து ஜவுளித்துறை சார்ந்த கிளஸ்டர்களில் 100 சதவீதம் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி, தினசரி சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீரை மறு சுழற்சி மூலம் சேமிக்கும் சாய ஆலைகள் திருப்பூரில் மட்டுமே உள்ளன. இதன் உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்:
நொய்யல் ஆற்றில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடுவதில்லை. மழைக்காலங்களில் மட்டுமே மழை நீர் ஓடுவதைப் பார்க்க முடியும். சில மாதங்கள் மழையே இல்லாமல் இருந்துவிட்டு, திடீரென மழை பெய்யும் பொழுது, அதுவரை ஆற்றில் தேங்கிக்கிடக்கும் சாக்கடைக் கழிவுகள், மழை நீரால் அடித்துச் செல்லப்படும் பொழுது, மழை நீரின் நிறம் கருப்பாக மாறி ஓடுகிறது. மேலும் ஆற்றில் பல மாதங்கள் தேங்கிக் கிடக்கும் பல்வேறு கழிவுகளின் தன்மையைப் பொருத்தும், ஆற்றில் ஓடும் மழை நீரின் நிறம் மாறுவதுண்டு.
இதுபோல் நஞ்சராயன் குளத்தில் மழையின் காரணமாக சாக்கடை கழிவுகள் கலந்ததால் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக மீன்கள் இறந்தது. எனவே திருப்பூரிலுள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை நேரில் பார்க்க விரும்புவோர், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் அனுமதியுடன் எப்பொழுது வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.