காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர்

ஆவத்திப்பாளையம் காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2024-01-15 08:37 GMT

சாயக்கழிவு கலக்கும் அபாயம் 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்நிலையில் ஆவத்திபாளையம் பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில தினங்களாக சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அதிகரித்துள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் செல்வது போல கழிவு நீர் பல வண்ணங்களில் ஆவத்திபாளையம் கால்வாய் வழியாக ஆற்றில் கலக்கும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெரும்பாலும் இரவு நேரத்தில் சாயக்கழிவு நீர் திறந்து விடப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்படுகிறது. ஆனாலும் போதிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே இருக்கிறது என ஆவத்திபாளையம் சுபாஷ் நகர், ராமகிருஷ்ணன் நகர், கண்ணதாசன் வீதி லைன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அளவுக்கு அதிகமான சாயக்கழிவு நீரில் வீசும் துர்நாற்றத்தின் காரணமாக, அவ்வழியே செல்லும் வயதானவர்கள் அவ்வப்போது மயங்கி விழுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் இதுகுறித்து புகார் எழும் போதெல்லாம் அதிகாரிகள் வருகிறார்கள். பார்வையிட்டு செல்கிறார்கள். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாயக்கழிவு நீர் கலக்கப்படும் சாக்கடை வாய்க்கால் அருகிலேயே திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் தேவைக்காக, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கபட்டு குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அருகிலேயே சாக்கடை கால்வாய் ஓடுவதால், எப்போது வேண்டுமானாலும் குடிநீரில் சாயக் கழிவு நீர் கலக்கும் அபாயம் உள்ளதால்,ஆற்று குடிநீரை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ,தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

Tags:    

Similar News