கோடை வெயில் எதிரொலி : சேலத்தில் பீர் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு

சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது.

Update: 2024-04-28 03:10 GMT

பைல் படம் 

தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அதேசமயம் பெரும்பாலான பொதுமக்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் மோர், இளநீர், பழச்சாறு போன்றவற்றை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் வெயிலுக்கு இதமாக `பீர்' குடித்தால் நன்றாக இருக்கும் என்று மதுப்பிரியர்களின் மனநிலையும் மாறியுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் மதுப்பிரியர்கள் பீர்களை விரும்பி வாங்கி குடிப்பதை காணமுடிகிறது. இதற்கு முன்பு 650 மில்லி பாட்டிலில் பீர் விற்பனைக்கு வந்தது. தற்போது 500 மில்லி டின்களிலும் பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் டாஸ்மாக் கடைகளுக்கு மாலையில் சென்றால் `கூலிங் பீர்' கிடைப்பதில்லை என்றும், சில கடைகளில் பீர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது கோடை காலத்தில் பிராந்தி, ரம், மதுவகைகளை காட்டிலும் பீர் விற்பனை அதிகமாக நடப்பது வழக்கம். தற்போது வழக்கத்தைவிட பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் பீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. அனைத்து கடைகளுக்கும் தேவையான மதுவகைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கோடை காலம் முடியும் வரையிலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என்றனர்.

Tags:    

Similar News