திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சி மீது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்தார்.;

Update: 2024-04-09 07:42 GMT

திமுக ஆட்சி மீது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அதிமுக வேட்பாளார் சேவியர்தாஸை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஏழையை பரம ஏழையாக்கியது திமுக ஆட்சி. புகார் பெட்டி வைத்து ஸ்டாலின் மனுக்களை வாங்கினார். நிறைவேறாவிட்டால் முதல்வரை அலுவலகத்தில் நேரில் சந்திக்கலாம் என்றார்.

ஆனால் அமைச்சர், எம்எல்ஏ கூட அவரை பார்க்க முடியாதநிலை உள்ளது. அப்புறம் எப்படி மக்கள் சந்திக்க முடியும். இப்படி தான் ஸ்டாலின் ஆசையை தூண்டி ஏமாற்றினார். மின்கட்டணம் 52 சதவீதம், வீட்டுவரி 100 சதவீதம், வணிகத்துக்கு 150 சதவீதம் என வரியை உயர்த்தி விட்டனர். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு குழு அமைத்தார். மொத்தம் 52 குழுக்கள் அமைத்த ஒரே அரசு இந்த திராவிட அரசு தான். நிதி மேலாண்மை குழு அமைத்த பின்னரும் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். நிர்வாக திறமையற்ற, பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றவில்லை.

Advertisement

தற்போது பெட்ரோல் விலையை ரூ.65 ஆக குறைப்பேன் என்கிறார். அதை குறைப்பது என்பது நடக்கிற காரியமா?. திமுக ஆட்சிக்கு வந்ததால் மக்களுக்கு ஏழரை சனி பிடித்துவிட்டது. கள்ளத்தனமான மது விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். எந்த கட்சியிலும் அயலக அணி இல்லை. திமுகவில் அயலக அணியை உருவாக்கி, அதற்கு நிர்வாகியை நியமித்து போதை பொருளை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளனர். போதையால் பெற்ற பிள்ளைகள் சீரழிவதை பார்ப்பது இந்த ஆட்சியில் தான்.

நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது அதிமுக. அதை நீதிமன்றத்தில் வாதாடி கொண்டு வந்தவர் முக்கிய காங்கிரஸ் பிரமுகரின் மனைவி. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. ஆனால் கரோனா காலக் கட்டத்தில் வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்தது அதிமுக. ஸ்டாலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பின் வேறு பேச்சு. தேர்தல் நேரத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் திமுக செய்திகளை வெளியிட உதவுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்க உள்ளோம்.

காவல் துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டது. அதனால் தான் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முடக்கிவிட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் சிவகங்கை பசுமையாக மாறியிருக்கும். அதிமுக ஆட்சியில் ஏராளமான புயல்கள் வந்தன. மத்திய அரசிடம் நிதி கேட்காமலே சமாளித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் ஒரு புயலை சமாளிக்க முடியாமல், மத்திய அரசு நிதி தரவில்லை என குறை சொல்லி கொண்டே இருக்கின்றனர்.

மாநில நிதியை பயன்படுத்தி மக்களை காப்பற்ற வேண்டியது தானே. உதயநிதி பேச்சை கேட்டு 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்தனர். தகுதி என்று கூறி, 13 லட்சம் பேருக்கு தான் நகை கடனை தள்ளுபடி செய்தனர். அவரை நம்பி அடகு வைத்த 35 லட்சம் பேர் நகையை இழந்தனர். இது தான் வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு தந்த பரிசு. உதயநிதி நீட் ரகசியத்தை விரைவில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் மக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News