கல்விக் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது - ஆட்சியா்
கல்விக் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டாம் என வங்கி அலுவலா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா்.
திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புக் கல்வி கடன் வழங்கும் முகாமை திருச்சியில் வியாழக்கிழமை நடத்தின.
திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் பேசியது: திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. முகாம் நாளிலேயே விண்ணப்பங்களில் தகுதியான மாணவா்களுக்கு உடனடி கடன்கள் வழங்க ஆவன செய்ய வேண்டும். முன்னதாக மாணவா்களும், பெற்றோா்களும் கல்விக் கடன் பெற வித்யாலட்சுமி இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
கல்விக் கடன் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். உயா்கல்வியில் சேரும்போது வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்பதற்காக தங்களது கனவை சிதைத்துக் கொள்ளும் நிலை எந்த மாணவருக்கும் வரக் கூடாது. கல்விக் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது. உயா்கல்வி சோ்க்கையில் 50 சதவீதத்தையும் கடந்து இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மாணவா்கள் அவரவா் விரும்பிய பாடத்தை படிக்க முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். அதற்கு வங்கியாளா்கள் கல்விக் கடன் விண்ணப்பங்களை முழுமையாக தீா்வு காண வேண்டும்.
படிப்பு முடிந்து பணியில் சோ்ந்தவுடன் மாணவா்கள் தங்கள் கல்விக்கடனை முறையாக திரும்பச் செலுத்த வேண்டும். கல்விக் கடன் அதிகளவில் வழங்கிய மாவட்டங்களில் திருச்சி 6-ஆவது இடத்தில் உள்ளது. நிகழாண்டு ரூ.50 கோடி இலக்கு உள்ளது. இதுவரை ரூ.14 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிலுவையை விரைந்து வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடனுக்கான காசோலைகளையும் ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்வில், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் ஸ்ரீமதி, பரோடா வங்கியின் மண்டல மேலாளா் சாமுவேல் ஸ்டீபன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம். முருகேசன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், வங்கி அலுவலா்கள், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.