முள்கத்தரிக்காய் விலை குறைவு
வேலூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் காரணமாக முள்கத்தரிக்காய் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் கத்தரிக்காய்களில் வேலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் இலவம்பாடி முள்கத்தரிக்காய் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த கத்தரிக்காய் வேலூரின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இதன் நிறம், சுவை, முள் ஆகியவை இவற்றின் தனி சிறப்பாகும். இதற்கான புவிசார் குறியீடும் பெற்றுள்ளது. இந்த கத்தரிக்காய் இலவம்பாடி, அணைக்கட்டு, லத்தேரி, கே.வி.குப்பம், காட்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விளைவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் காட்பாடி அருகே சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட முள்கத்தரிக்காய் தற்போது அறுவடை தொடங்கி நடைபெறுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நாங்கள் விளைவிக்கும் முள் கத்தரிக்காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். பல இடங்களில் விவசாயிகள் விளைவித்துள்ளனர்.
இதனால் வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.30 முதல் தரத்துக்கு ஏற்றார்போன்று விற்பனையாகிறது. அறுவடை கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால் போதிய லாபம் இல்லை என வேதனையோடு தெரிவித்தனர்.