தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி வட்டாட்சியர் சமாதான பேச்சு வார்த்தை

தேர்தல் புறக்கணிப்பை அறிவித்த கிராம மக்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2024-02-22 09:46 GMT
சமாதான பேச்சுவார்த்தை
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்த கிராம மக்களுடன் வட்டாட்சியர் புதன்கிழமை அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். திருவையாறு வட்டத்திலுள்ள விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம், சிறுபுலியூர், கடுவெளி, ஆக்கிநாதபுரம், பொன்னாவரை, கல்யாணபுரம், தில்லைஸ்தானம், புனவாசல், மேலபுனவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தர்மராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 'கிராமங்களில் விவசாய தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே அரசு வழங்கும் நூறு நாள் வேலை திட்டம் மூலம் கிடைக்கும் பணி கிடைக்காமல் பாதிக்கப்படுவர். கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்பதால், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம்' என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருவையாறு பேரூராட்சி அலுவலகம் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர் பேசுகையில்,' இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆணை, அரசு வழிமுறைகள் ஏதும் வரப்பெறவில்லை' என்றார். இதைத்தொடர்ந்து, வருகிற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத் துணை வட்டாட்சியர் அம்மு, சரக வருவாய் ஆய்வர் சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரேணுகா, துளசிராமன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் புகழேந்தி, பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராம், பிரதீப் ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலர் கதிரவன், அதிமுக கிளைச் செயலாளர் திருஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News