வானூர் அருகே மீன் வியாபாரியிடம் ரூ.97 ஆயிரம் பறிமுதல் !
வானூர் அருகே மீன் வியாபாரியிடம் ரூ.97 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-21 05:02 GMT
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்ததால், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கொடூர் சாலையில் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் குகநாதன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது, திண்டிவனத்தில் இருந்து காலாப்பட்டு நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் இருந்த புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 97 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது, புதுச்சேரியில் மீன் வியாபாரத்துக்காக பணத்தை எடுத்து வந்ததாக ரமேஷ் கூறினார். ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.97 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, வானூர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.