சாலை நடுவே மின் கம்பம் - இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
Update: 2023-12-06 09:44 GMT
காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டு, வேதாசலம் நகரில், பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக இருந்தது. மழைக்காலத்தில் மண் சாலை, சகதியாக மாறிவிடுவதால், இப்பகுதியினர் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி சார்பில், இரு மாதங்களுக்கு முன், வேதாசலம் நகருக்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவில் இருந்த மின்கம்பம் சாலையோரம் இடமாற்றம் செய்யாமல், சாலை அமைத்து உள்ளனர். இதனால், கட்டுமானப் பணிக்காக இத்தெருவில் மணல், செங்கல், ஜல்லி ஏற்றி வரும் லாரிகள், சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தை சாலையோரம் இடமாற்றம் செய்ய மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.