வாகனத்திற்கு வழிவிட்ட யானை - வீடியோ வைரல்

கனுவாய் அருகே சாலையில் சென்ற இரு சக்கர வாகனத்திற்கு வழிவிட்ட யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2024-01-05 01:40 GMT

யானை 

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன.இந்நிலையில் கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை தாளியூர் பகுதி வழியாக வடவள்ளி தொண்டாமுத்தூர் பிரதான சாலைக்கு வந்துள்ளது. வடவள்ளி வரை சாலையில் வந்த ஒற்றை யானை ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வடவள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய காட்டு யானை நேரு நகர் வழியாக கனுவாய் சாலையில் சென்று மருதுமலை வன பகுதிக்குள் சென்றது. இதனிடையே வடவள்ளியில் இருந்து நேரு நகர் வழியாக பிரதான சாலையில் யானை நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிரே இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் வருவதை பார்த்து சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்றது.பின்னர் இருசக்கர வாகனம் சென்ற பின்னர் சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News