ஆவடி சாலையில் ஆக்கிரமிப்பு - மாநகராட்சி, குடிநீர் வாரியம் வேடிக்கை
மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், நியூ ஆவடி சாலையில் மீண்டும் சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டு வில்லிவாக்கத்தில், நியூ ஆவடி சாலை உள்ளது. இங்கு ஒருபுறத்தில், வில்லிவாக்கத்தில் இருந்து, ஐ.சி.எப்., மற்றும் அண்ணா நகரை நோக்கிச் செல்லும் பாதையும், மற்றொரு புறத்தில் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம், பாடியை நோக்கிச் செல்லும் பாதையும் உள்ளன. இதில், பாடியை நோக்கிச் செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. வில்லிவாக்கம் - அண்ணா நகரை நோக்கிச் செல்லும் சாலையோரம், குடிநீர் வாரியத்திற்கு செந்தமான இடங்கள் உள்ளன.
இந்த இருபுறங்களில் உள்ள சாலையோரங்களை பல ஆண்டுகளாக, ஏராளமான வாகனம் பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்து இருந்தன. இந்த கடைகளுக்கு வரும் பழுது ஆட்டோக்கள் சாலையோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டதால், சாலை சுருங்கி காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதற்கிடையில், சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலை துறையின் நிதியில், சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. தற்காக கடந்த மார்ச் மாதம் இரண்டு கட்டமாக, இருபுறங்களிலும் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிரடியாக அகற்றியது.
அதன்பின், முறையாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால், தற்போது மீண்டும் சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. பல ஆண்டுகளாக, இங்கு ஆக்கிரமிப்பு பிரச்னை நிலவுகிறது. கண்துடைப்புக்கு மாநகராட்சி செலவு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறது. அதன்பின், தடுப்பு நடவடிக்கை எடுப்பதில்லை. மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், சாலையில் மீண்டும் ஆட்டோக்கள் பழுதுபார்க்கும் கடை உள்ளிட்ட கடைகள் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளன. இதைத் தடுக்க, நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.