பொறியியல் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காணக்கிளியநல்லூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்த போது தனியார் பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
மாணவர் உடல் மீட்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் உள்ளது தனியார் பொறியியல் கல்லூரி. இக் கல்லூரியில் சேலம் மாவட்டம் , மேட்டூர் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மகன் 19 வயதான ரக்ஷித் என்ற மாணவர் பிஇ, சி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் சக கல்லூரி விடுதி மாணவர்களுடன் புள்ளம்பாடி அருகே உள்ள காணக்கிளி நல்லூர் கிராமத்தில் உள்ள நந்தியாறு தடுப்பணை அருகே உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் 10 க்கும் மேற்பட்ட கல்லூரியின் விடுதி மாணவர்கள் நேற்று மாலை குளித்தனர்.
அப்போது ரக்ஷித் நீச்சல் தெரியாமல் கிணற்றுக்குள் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இது குறித்து சக மாணவர்கள் புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மாணவர் ரக்ஷித்தை சடலமாக மீட்டனர்.மாணவரின் சடலத்தை கைப்பற்றிய காணக்கிளியநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் இதே கல்விக் குழும மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் கன்னியாகுமரி கடலில் மூழ்கி ஆறு பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த பொறியியல் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியதாக உள்ளது.