திமுக இளைஞரணி வாகன பேரணிக்கு அரவக்குறிச்சியில் உற்சாக வரவேற்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்வு விலக்கு கேட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.நேற்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நீட் தேர்வு விலக்கு கேட்டு, இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் புல்லட் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் அருகே வரும்போது அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையிலான திமுகவினர் ட்ரம்ஸ் இசைக் குழுவினர் இசைத்து உற்சாக வரவேற்பளித்தனர். பேரணியில் வந்த இளைஞர்களுக்கு அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கட்சிக்கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட துண்டை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய திமுகவின் பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.