ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை புதிய சாதனை
ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழ்கிறது.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (32). கடந்த 2016ம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிவண்ணனுக்கு கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் தானம் பெற்று அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதையடுத்து மணிவண்ணன் கடந்த 2022ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மணிவண்ணன் மூளை சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து, மணிவண்ணனுக்கு தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் கிடைத்ததோ, அதேபோல் மற்றவர்களுக்கும் அவரது உடல் உறுப்புகள் கிடைக்க வேண்டும் என அவரது பெற்றோர் முடிவு செய்து, மணிவண்ணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதன்பேரில், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி, மணிவண்ணனின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. தொடர்ந்து உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த கல்லீரல் பாதிக்கப்பட்ட முகேஷ்குமார் (61) என்பவருக்கு, மணிவண்ணனின் கல்லீரல் அறுவை சிகிச்சை மூலம் முகேஷ்குமாருக்கு பொருத்தப்பட்டது.
அதேபோல் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் தலைமையில் அன்றைய தினம் இரவே மீண்டும் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது, இரண்டு நோயாளிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக டாக்டர் சரவணன் தெரிவித்தார்.