சேலம் அஸ்தம்பட்டி பேக்கரியில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
Update: 2024-06-24 05:59 GMT
சேலம் அஸ்தம்பட்டியில் மத்திய சிறைச்சாலை எதிரே உள்ள ஒரு பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி மற்றும் அலுவலர்கள் நேற்று சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பேக்கரியில் காலாவதியான கடலை மிட்டாய், தயாரிப்பு தேதி குறிப்பிடாத மிக்சர் வகைகள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் உணவு தயாரிப்பு கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்படாமலும், கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து காலாவதியான கடலை மிட்டாய், பேக்கிங் செய்து தயாரிப்பு தேதி குறிப்பிடாத மிக்சர், 6 கிலோ டீத்தூள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பேக்கரி உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அத்துடன் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி தெரிவித்தார்.